7 Superfoods for Health- இன்றைய வாழ்வியல் முறையில் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் வகையில் பலதரப்பட்ட உணவு முறைகளும் மற்றும் பழக்கவழக்கங்களும், மனிதனுடைய உடல் நலனை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது. இருப்பினும், ஆரோக்கியமான உடல் நலத்துக்கு நாம் உணவை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு எடுத்துக்கொள்ளும் உணவில் சேர்க்கப்படும் பொருட்கள் சுவைக்காக மட்டுமல்லாமல் நம் உடலுக்கும் ஆரோக்கியம் சேர்க்கும் வகையில் இருக்க வேண்டும்.
சில சமயங்களில் உணவின் சுவைக்காக சேர்க்கப்படும் பொருட்களின் மருத்துவ நன்மைகளை அறியாமலேயே அவற்றை புறக்கணித்து விடுகிறோம். அந்த வகையில் நம் ஆரோக்கியத்தையும் மற்றும் நோய்களையும் தடுக்கும் சில முக்கிய உணவு பொருட்கள் இருக்கின்றன. இதனை சேர்க்கும்போது உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்குவதுடன், இதன் வாசனையையும் மற்றும் சுவையும் உங்களுக்கு கூட்டி தரும். இப்போது, உணவுப் பட்டியலில் சேர்க்கவேண்டிய 7 அற்புத உணவுப் பொருட்களை பற்றி தெரிந்து கொள்வோம், அவைகள் உங்கள் ஆரோக்கியத்தை மேலும் மேம்படுத்த உதவும்.
7 Superfoods for Health
1. மஞ்சள் (Turmeric): நம் முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கு உணவிலும் மற்றும் மருத்துவத்திலும் மஞ்சள் வேர் அல்லது மஞ்சள் பொடி முக்கிய பங்காக இருந்தது. மஞ்சளில் உள்ள முக்கியச் சேர்மமான குர்குமின் (Curcumin) பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. இது அழற்சிக்கு எதிரான மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பலன்களுடன் கூடிய ஒரு சக்தி வாய்ந்த பொடி ஆகும். இது மிகவும் பழமையான இயற்கை மருத்துவ முறையாகும்
பயன்படுத்தும் முறை மற்றும் அதன் நன்மை:
பால், உணவு மற்றும் சூடு நீரில் போன்றவற்றில் மஞ்சள் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் நரம்புகளில் ஏற்படும் அழற்சி, ஞாபக சக்தியை அதிகரிப்பது, இதய நோய்களின் அபாயத்தை குறைப்பது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, தேவையற்ற கொழுப்பைக் குறைப்பது, மூட்டு வலி குறைக்கவும், சருமத்தைப் பொலிவூட்டுவும் மற்றும் சருமத்தில் உள்ள சேதமடைந்த செல்களை சரிசெய்யவும் உதவுகிறது. இதனால் நீங்கள் அதிக ஆரோக்கியத்துடன் வாழலாம்.
2. முருங்கை (Moringa): நம் முன்னோர்கள் வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்க சொன்னார்கள். ஆனால் அது ஒரு முருங்கை மரமாக இருந்தால் நம் உடலில் பல்வேறு நோய்கள் வராமல் தடுத்திடலாம். இதற்கு காரணம் முருங்கை இலை, முருங்கை காம்பு, முருங்கை பூ, முருங்கை பட்டை, முருங்கை பிசின், முருங்கை காய், முருங்கை விதை என ஒவ்வொன்றும் அற்புதமான, தனித்துவமான நன்மைகளை கொண்டுள்ளது. அறிவியல் பூர்வமாக சொல்ல வேண்டுமென்றால் இதில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் (nutrients) மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்ட் (antioxidants) உள்ளது. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், இந்த முருங்கை உடலுக்கும், மனதிற்கும், மற்றும் சுவாச ஆரோக்கியத்திற்கும் சிறந்த உணவாக கருதப்படுகிறது.
பயன்படுத்தும் முறை மற்றும் அதன் நன்மை:
முருங்கை இலையினை சாறாகவோ அல்லது பொரியல் செய்தோ சாப்பிடலாம். மற்றும் முருங்கை காய், முருங்கை பூ போன்றவற்றை பயன்படுத்தி சாம்பார், குழம்பு, மற்றும் கூட்டு செய்யலாம். இப்படி சாப்பிடுவதன் மூலம் உடல் நலத்தை மேம்படுத்தி, நுண்ணுயிர் கொல்லிகளால் வரும் தொற்றுக்களை எதிர்த்து நிற்க உதவுகிறது. மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கும், எலும்புகளை வலுவாக வைத்திருக்கவும், மலச்சிக்கலை தவிர்க்கவும், தோலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி இளமை தோற்றத்தை பெறவும் பயன்படுகிறது.
3. தேங்காய் எண்ணெய் (Coconut Oil): தேங்காய் எண்ணெய், எப்போழுதுமே நம் வாழ்வில் முக்கிய பங்கு வகிப்பதாகும். இதனை ஆதிகாலத்தில் இருந்து பல்வேறு முறைகளில் பயன்படுத்தி வருகின்றனர். அதற்கு காரணம், சரியான விதத்தில் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவதால் நீண்டகாலம் ஆரோக்கியமான நன்மைகளைப் பெற முடியும். ஆம், தேங்காய் எண்ணெய் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது பல்வேறு ஆரோக்கியமான நன்மைகளை வழங்குகிறது, குறிப்பாக உடலுக்கு தேவையான சத்துக்கள் மற்றும் அழகிற்கான பராமரிப்பினை தருகிறது.
பயன்படுத்தும் முறை மற்றும் அதன் நன்மை:
- தேங்காய் எண்ணெய்யை நேரடியாக நம் உணவில் சேர்த்துக்கொள்ள முடியும். இதனால் மிதமான சத்து மற்றும் செழிப்பான கொழுப்புக்களை கொண்டுள்ள தேங்காய் எண்ணெய், உடலின் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் தேங்காய் எண்ணெயில் உள்ள லாரிக் அசிட் உடலில் உள்ள கொழுப்புக்களை எரிக்கச் செய்து, உடல் பருமனைக் குறைக்க உதவியாக இருக்கிறது. அதுமட்டுமின்றி இதயத்தின் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
- தேங்காய் எண்ணெய்யை நம் உடலின் வெளிப்புறமாக பயன்படுத்துவதால் தோலின் ஈரப்பதத்தை பாதுகாப்பது மட்டுமல்லாமல், தோலினை இளமையாக்கி மென்மையாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. மேலும் இதன் வாசனை மன அழுத்தத்தை குறைப்பதாகவும் கருதப்படுகிறது.
- தேங்காய் எண்ணெய்யை தலை முடிக்கு தேய்ப்பதன் மூலம் முடி வளர்ச்சிக்கும் மற்றும் தலையின் குளிர்ச்சி தன்மையை அதிகரிக்கவும் உதவுகிறது.
முக்கிய குறிப்பு:
தேங்காய் எண்ணெய்யை எப்படி சரி பார்த்து வாங்குவது? கடைகளில் எண்ணெய் வாங்கும் பொழுது கீழே உள்ளவாறு சரி பார்த்து வாங்க வேண்டும்.
- விர்ஜின் தேங்காய் எண்ணெய் (Virgin Coconut Oil) மற்றும் கோல்ட்-பிரஸ்ட் (cold-pressed) என்பது சுத்தமான, கச்சா எண்ணெய். இது வெப்பத்தை உபயோகிக்காமல், இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் எண்ணெய் ஆகும்.
- Unrefined எனப்படும் எண்ணெய் மற்றும் ராசாயன சேர்க்கைகளில்லாத (chemical-free) எண்ணெய்களை வாங்கி பயன்படுத்துவதன் மூலம் உடலின் ஆரோக்கியத்தை பாதிக்காமல் பார்த்துக்கொள்ள முடியும். அதுமட்டுமில்லாமல் எண்ணெயின் நிறம், நல்ல லேபிள்கள் மற்றும் சான்றிதழ்கள் (Certified Organic) போன்றவற்றை சரிபார்த்து தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும்.
ஒரு தகவல்: கேரளாவில் பழமையான முறையில் தயாரிக்கப்படும் எண்ணெய், அதிகப்படியான ஆரோகியத்தை கொடுக்கும்.
4. இஞ்சி (Ginger): இஞ்சி, சைவம் முதல் அசைவம் வரை அனைத்து உணவுகளிலும் பயன் படுத்தப்படுகிறது. இதன் நற்குணங்கள் அறிந்த நம் முன்னோர்கள் சுவைக்காக மட்டுமல்லாமல் மருத்துவ பலன்களுக்காகவும் காலம் காலமாக பயன்படுத்தி வந்துள்ளனர். நாம் தினசரி சிறிதளவு இஞ்சி உட்கொள்வதன் மூலம் உடலின் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை தருகிறது. அதனால் இஞ்சி பல மருத்துவ குணங்களைக் கொண்டதாக கருதப்படுகிறது.
பயன்படுத்தும் முறை மற்றும் அதன் நன்மை:
இஞ்சி ஒரு இயற்கை மருந்தாகவே பயன்படுத்தப்படுகிறது. அதனை சாப்பாடு, தேநீர், சூப், சாறு போன்ற உணவுகளின் மூலம் கலந்து சாப்பிடலாம். அப்படி சாப்பிடுவதன் மூலம் உணவின் செரிமானத்தை தூண்டி, அஜீரணத்தை குறைக்கிறது. மேலும் காய்ச்சல், சளி, மூக்கடைப்பு, உடல் எடையைக் குறைக்க, இரத்தத்தை சுத்திகரிக்க, எலும்புகள் வலுவாக்க மற்றும் தலைவலிகளுக்கு சிறந்த நிவாரணியாக இருக்கின்றது.
முக்கிய குறிப்பு: இஞ்சியை உட்கொள்ளும் போது அளவுக்கு அதிகமாக உட்கொள்ளாமல் சிறிதளவு இஞ்சி உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை தரும். ஆனால் அளவு மிகவும் முக்கியம். இல்லையெனில் சில பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும்.
5. பாதாம் (Almond): இயற்கையில் விளைகின்ற பல பருப்பு வகைகளில் எல்லாமே மனிதனின் உடல்நலத்திற்கு தேவையான பல சத்துக்களை கொண்டவை தான். அந்த வகையில் எல்லோரும் உண்ணக்கூடிய பாதம் பருப்பில் (Almonds) ஏராளமான நார்ச்சத்து மற்றும் ப்ரோட்டீன் உள்ளன. பொதுவாக, பாதாம் பருப்பில் நிறைய வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்சிடன்ட்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்திருக்கின்றன. இதனை தினமும் உண்பதன் மூலம் பல நன்மைகளை பெறலாம்.
பயன்படுத்தும் முறை மற்றும் அதன் நன்மை:
தினசரி ஒரு கைப்பிடி அளவு பாதாம்களை இரவில் நீரில் ஊற வைத்து, காலையில் தோலுரித்து சாப்பிடுவதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை நீண்ட காலத்திற்கு பராமரிக்கலாம். பாதாம்களில் வைட்டமின்கள் (Vitamin E, B2), முக்கிய தாதுக்கள் (Magnesium, Potassium) மற்றும் நார்ச்சத்து (Fiber) அதிகமாக உள்ளது. இதனால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும். அதுமட்டுமின்றி இதய நோய் வராமல் பாதுகாக்கிறது. மேலும் உயர் இரத்த அழுத்தம், வயிற்றுப்போக்கு, செரிமானக் குறைபாடு, மூளையின் செயல்திறனை அதிகரிக்க, கண்ணின் பார்வையை மேம்படுத்த, நரம்பு பிரச்சனைகளை தவிர்க்க, தோலை மினுமினுப்பாக்க சிறந்த நிவாரணியாக இருக்கின்றது.
6. பூண்டு (Garlic): நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் உணவு பொருட்களில் பூண்டும் ஒரு முக்கியமான உணவு பொருளாகும். இதனை உட்கொள்வதனால் பல்வேறு உடல்நல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். ஆனால் உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் இந்த பூண்டினை எடுத்துக் கொள்ளாமல் ஒருசிலர் ஒதுக்கி வைப்பர். இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. அதன் முழுப் பலன்களையும் பெற, பச்சைப் பூண்டை உட்கொள்ளலாம்.
பயன்படுத்தும் முறை மற்றும் அதன் நன்மை:
பூண்டில் வைட்டமின் C, B6, மாங்கனீசு, சல்பர் போன்ற பல முக்கிய ஊட்டச்சத்துகள் உள்ளன. இதனால் நாம் தினமும் சமையலில் சேர்த்தோ அல்லது தேனில் கலந்தோ சாப்பிடலாம். மேலும், பூண்டை நன்கு நசுக்கி அல்லது வெட்டிக்கொண்டு வெறும் வயிற்றில் நீர் குடித்தவுடன் சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிடுவதன் மூலம் பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சு தொற்றுகளைத் தடுக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி இதய நோய்களைத் தடுக்க, எடையை குறைக்க, நல்ல மற்றும் ஆழமான தூக்கத்தை ஏற்படுத்த, உடலின் வெப்பநிலையை சீராக வைத்துக்கொள்ள, எலும்புகளின் பலத்தை அதிகரிக்க மற்றும் சில வகை புற்றுநோய்களைத் தடுக்கவும் சிறந்த நிவாரணியாக உள்ளது.
முக்கிய குறிப்பு: பூண்டினை அதிகமாக சாப்பிடும் போது, வயிற்று எரிச்சல், வாயில் துர்நாற்றம், வயிற்றுப்போக்கு போன்ற சில பக்கவிளைவுகள் ஏற்படலாம். அதனால் தினசரி 1-2 பல் பூண்டு உண்பது போதுமானதாக இருக்கும்.
7. கருப்பு மிளகு (Black Pepper): இந்த கருப்பு மிளகினை காரத்திற்க்காகவும், சுவைக்காகவும் உலகெங்கிலும் பரவலாக இதனை பயன்படுத்தி வருகின்றனர். மிளகாய்க்கு பதிலாக கருப்பு மிளகினை பயன்படுத்தினால் மிகவும் நல்லது. இதனை தினசரி நம் உணவுகளில் சேர்த்து கொண்டால், சளி, இருமல், தொண்டை வலி, தொண்டை அடைப்பு, மூச்சு திணறல் போன்றவற்றை நீக்கி ஆரோக்கியமாக வைக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடுவதற்கு ஏற்றது. இதனாலையே ஆதிகாலம் முதல் இக்காலம் வரை இந்த கருப்பு மிளகு நம் உணவில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
பயன்படுத்தும் முறை மற்றும் அதன் நன்மை:
இதனை, மிளகுவாகவோ அல்லது மிளகு பொடியாகவோ நாம் சமைக்கும் பொழுது உணவில் சேர்த்து சமைக்கலாம். மேலும் மிளகு ரசம், மிளகு பால், மிளகு கசாயம் மற்றும் மிளகு தேநீர் போன்ற முறைகளிலும் பயன்படுத்தலாம். இதனால் நம் உடலில் உள்ள காய்ச்சல், இருமல், சளி, உடல் சூட்டை குறைக்க, ரத்தச் சுழற்சி சீராக்க, நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்க மற்றும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், சுருக்கங்கள் போன்றவற்றை குணப்படுத்த உதவுகிறது.
முக்கிய குறிப்பு: கருப்பு மிளகை உட்கொள்ளும் முன், உடல் நிலை அல்லது குணப்படுத்தல் தேவைகளைப் பொறுத்து உட்கொள்வது நல்லது. முக்கியமாக கர்ப்பிணி பெண்கள், மருந்து உட்கொள்வோர், மற்றும் ஒவ்வாமை இருப்பவர்கள், இது தொடர்பான எந்த மருத்துவ சிகிச்சையையும் முன்னெடுக்கும் முன் மருத்துவரை அணுகுவது அவசியம்.